அறிஞர் அண்ணாவின் தலைமைப் பண்பு

  Jul 2nd, 2020, 100 Readers

வாசி யோசி நேயர்களுக்கு, உங்கள் குமரி மலரவனின் மகிழ்வான வணக்கங்கள்!

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் இறப்பவர்களின் பட்டியலும் நீண்டு கொண்டே போகிறது. பாதிக்கப்படுபவர்களின் பட்டியலும் நீண்டு நீடித்துச் செல்கிறது. எனவே நாம் நிம்மதி இழந்து இருக்கிறோம். கொரோனா அமைதியை அழித்திருக்கிறது. வாழ்வை அழிப்பதற்கு அலை மோதிக்கொண்டே இருக்கிறது. எனவே அமைதியாய் வீட்டில் இருப்போம்! சமூகத்தில் சமூக விலகலைக் கடைபிடிப்போம்! வாழ்வை காத்துக் கொள்வோம்!

இன்றைய வாசி யோசி பகுதியில் அதிகாரம் நிலைத்திருப்பது அல்ல. அது நிலையற்றது எனவே அதிகாரத்தில் அமரும்போது தன்னுயிரைப் போல் பிறரையும் நேசிக்கவேண்டும் என்பதை யோசிப்போம்! அதிகாரம் என்பது அடுத்த நிமிடமே பறிபோகக் கூடியது. அதிகாரம் என்கிற போதை மேதையையும் கூட பேதையாக்குகிறது. அதிகாரத்தில் அமர்ந்துவிட்டால் தரைமட்டும் தாழ்ந்து போகும் தாழ்ச்சி தலைக்கேற வேண்டும். முதிர்ந்து நிற்கும் கதிர் போல் தலை சாய வேண்டும். தலைவனுக்கு தலைக்கனம் இருக்கக்கூடாது. அதில் அவன் தனிக்கவனம் செலுத்த வேண்டும். அதிகாரத்தில் அமரும்போது வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும். அந்த வார்த்தைக்கு கையளவு அல்ல மலையளவு நம்பிக்கை உண்டு.

அறிஞர் அண்ணா ஒருநாள் திடீரென தன் கட்சி பிரமுகரை கோட்டையில் அவரது அலுவலகத்திற்கு வரச்சொன்னார். அவரது அறையின் பக்கத்தில் கடல் இருந்தது, அண்ணா அந்த கடலையே உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தார். அவரது எதிரே பிரமுகர் அமர்ந்திருந்தார். பிரமுகரை பார்க்காமல் கடலையே மிக கவனமாகப் பார்த்துக் கொண்டு தீவிர சிந்தனையில் இருந்தார் அண்ணா.அதிக நேர சிந்தனைக்குப் பிறகு "நாம் மக்களுக்கு நிறைய வாக்குறுதிகளை வாரி வழங்கி இருக்கிறோம். ஆனால் அவற்றை நிறைவேற்ற முடியவில்லை. எனவே ஆட்சி அதிகாரத்தை விட்டு விலக வாய்ப்பு இருக்கிறதா என்பதை ஜனநாயக ரீதியில் சிந்தித்துச் சொல்" என்றார் அண்ணா. பிரமுகருக்கு இதைக் கேட்டவுடன் தூக்கிவாரிப் போட்டது. அவர் பதில் எதுவும் பேசாமல் மௌனியாக நின்றார். கிடைத்த அதிகாரத்தை எப்படியாவது அணைபோட்டு காத்துக் கொள்ள நினைக்கும் இக்காலகட்டத்தில், கிடைத்த அதிகாரத்தினை எப்படி துறப்பது என்று யோசித்தவர் அண்ணா. அதிகாரத்தில் அமரும்போது மக்கள் வாழ்வு சிறக்க வில்லை என்றால் துறப்பதே நல்லது.

அதிகாரத்தில் வீரத்தை விட ஈரம் முக்கியம்! இறுக்கத்தை விட இரக்கம் முக்கியம்! ஆணவத்தை விட அன்பு முக்கியம்! தன்னை விட பிறர் முக்கியம்! அதிகாரம் அபகரித்துக் கொள்வதற்காக அல்ல, அர்ப்பணிப்பதற்காக என்பதை புரிந்து கொள்வோம்! அருட்பணி.எ. ஒய்சிலின் சேவியர், பங்குத்தந்தை, கொல்வேல். தேனருவி மீடியாவின் youtube Channel https://www.youtube.com/channel/UCxgfr5Dr8udb-VwA...Subscribe பண்ணுங்க